Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நேற்று (18/06/2026) சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் மீதான வாதம் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,
முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்பொழுது ஆளுநர் எழுந்து நின்று மரியாதை கொடுத்திருக்கிறார். ஒரு முக்கியமான நிகழ்வை அமைதியான முறையில் இந்த அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாவின் கொள்கைகளை நாங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். திராவிட கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இருக்கிறது என்று பேசி இருந்தார்.
அதற்குப் பிறகு திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், நேற்று கொடுத்த நிகழ்ச்சி நிரலில் ஒருமுறைதான் தேசிய கீதம் பாடப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு முறை ஒலிக்கப்பட்டது. இதைத் தடுத்திருக்க வேண்டும். இப்படி விட்டுத்தான் மராட்டிய மாநிலம் மராத்தி மொழியை இழந்து விட்டது. இதுபோன்று ஒவ்வொரு விஷயமாக நாம் இழக்கக்கூடாது என்று பேசினார். முன்னாள் அமைச்சர் சிவசங்கரும் அதே கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
செங்கோட்டையன் மற்றும் மூத்த அமைச்சர்கள் இதற்குப் பதில் கொடுத்தனர். அப்போது சபாநாயகர் பேசுகையில், நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்க வேண்டும். ஆளுநருடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று எந்த மாநில அரசும் விரும்பும். ஒருமுறை பாடப்பட்டது, இரண்டு முறை பாடப்பட்டது எனக் குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம் என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b