தீப்பந்த வெளிச்சத்தில் மூதாட்டியை மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
நெல்லை, 19 ஜூன் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலையை அடுத்த ஊத்து தேயிலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் வள்ளியம்மாள் (வயது 68). இந்த நிலையில், அந்த பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு மாடு
Nellai


நெல்லை, 19 ஜூன் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலையை அடுத்த ஊத்து தேயிலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் வள்ளியம்மாள் (வயது 68). இந்த நிலையில், அந்த பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு மாடு எதிர்பாராத விதமாக மூதாட்டி வள்ளியம்மாளை தாக்கியுள்ளது.

இதில் மூதாட்டி பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார். அவருக்கு கை மற்றும் காலில் பலத்தக் காயம் ஏற்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மலைக் கிராம மக்கள் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸுக்கு தொலைபேசி வாயிலாக தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

யானைகள் அதிகம் உள்ள வனப் பகுதி என்பதால் வனத் துறையினரின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பல மணி நேரத்திற்கு பிறகு ஊத்துப் பகுதிக்கு சென்று மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மேலும் அந்த பகுதியில் மின்சாரம் இல்லாததால் தீப்பந்த வெளிச்சத்தில் மூதாட்டியை ஸ்ட்ரெட்சரில் வைத்து மலைப் பகுதியில் இருந்து கீழே தூக்கி வந்தனர்.

பின்னர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர்.

பிறகு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மணிமுத்தாறில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலைக்கு செல்லும் மலைப் பாதையின் சாலை மிகவும் மோசமாக உள்ளது. பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பகல் நேரத்திலேயே இந்த சாலையில் செல்வது மிக கடினம்.

மாஞ்சோலை பகுதியில் செயல்பட்டு வந்த தேயிலை நிறுவனம் உற்பத்தியை நிறுத்திய நிலையிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் சுமார் 100 பேர் அங்கேயே தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் மாஞ்சோலையில் மருத்துவம், கல்வி, தபால் உள்பட அரசின் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆள் நடமாட்டம் குறைந்துள்ளதால் வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN