Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் ஆன்லைன் மூலம் அறிமுகமாகி காதலாக மாறிய உறவில், இளம்பெண்ணிடம் இருந்து 52 சவரன் நகைகளை பெற்று காதலன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலம் ஒரு இளைஞருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் சென்னை வந்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற காதலன், “இந்த கோவிலுக்குள் நகை அணிந்து செல்லக் கூடாது” என்று கூறி, அவர் அணிந்திருந்த 52 சவரன் தங்க நகைகளை கழற்றி தன்னிடம் ஒப்படைக்கச் செய்ததாக தெரிகிறது.
பின்னர் கோவிலுக்கு சென்று விட்டு இருவரும் ஒரு லாட்ஜில் தங்கியுள்ளனர். அப்போது, “நீ குளித்துவிட்டு வா, நான் உணவு வாங்கி வருகிறேன்” என்று கூறி நகைகளுடன் வெளியே சென்ற காதலன், அதன் பிறகு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.
தன்னை காதலிப்பதாக நம்பவைத்து ஏமாற்றி, 52 சவரன் நகைகளுடன் தப்பிச் சென்றதாக இளம்பெண் சென்னை கோயம்பேடு சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சிஎம்பிடி போலீசார், தலைமறைவான இளைஞரை தேடி வருவதுடன், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam