ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி மீது சிபிஐ வழக்குப்பதிவு
தேனி, 19 ஜூன் (ஹி.ச.) தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட காமராஜபுரம் போஸ்ட், காந்தி தெருவை சேர்ந்த நல்லையா என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன் சென்னை சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் மனுவை அளித்திருந்தார். அந்தப் புகாரில் 1991- ஆம் ஆண்ட
CBI


தேனி, 19 ஜூன் (ஹி.ச.)

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட காமராஜபுரம் போஸ்ட், காந்தி தெருவை சேர்ந்த நல்லையா என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன் சென்னை சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் மனுவை அளித்திருந்தார்.

அந்தப் புகாரில் 1991- ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். பிரிவைச் சேர்ந்த ரங்கராஜ், கோயம்புத்தூரில் வருமான வரித்துறை முதன்மை ஆணையராகப் பணியாற்றிய போது அவரும் அவரது மனைவி உமா மகேஸ்வரியும் இணைந்து 2020-2021 முதல் 2023-2024 வரையிலான நிதியாண்டுகளில் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தாளவாடி தாலுகாவிற்கு உட்பட்ட டி.புதூர் பேட்டா கிராமத்தில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பில் விவசாய நிலத்துடன் கூடிய விடுதி மற்றும் பண்ணை வீடு (Resort/Farm House) கட்டியதாகவும், கோயம்புத்தூர் மாவட்டம், நீலாம்பூர் கிராமம் மற்றும் குளத்தூர் ஆகிய பகுதிகளில் 16 கோடி ரூபாய் மதிப்பில் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக நிலம் வாங்கியதாகவும், மொத்தமாக 23 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக சொத்து சேர்த்துள்ளதாகவும் புகார்தாரர் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ரங்கராஜ் கடந்த ஆண்டு மே 31-ஆம் தேதி அன்று சென்னை வருமான வரித்துறை தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்பது தெரிய வந்தது. அவரது மாமனார் ராஜு மற்றும் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன.

கடந்த 2010- ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024- ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலத்தில் அவர்களின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது. சோதனைக் காலத் தொடக்கத்தில் இருந்த சொத்து மதிப்பு 24,87,450 ரூபாய் ஆகும். சோதனைக் கால முடிவில் இருந்த சொத்து மதிப்பு 5,08,74,747 ரூபாய் மதிப்பு ஆகும்.

சோதனைக் காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 5,29,24,845 ரூபாய் ஆகும். சோதனைக் காலத்தின் மொத்த செலவினம் 2,28,12,863 ரூபாய் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமான சொத்தின் மதிப்பு 1,82,75,315 ரூபாய் இருந்துள்ளது. இதன் மூலம் தங்களது சட்டப்பூர்வமான வருமானத்தை விட 34.53% அதிகமாக சொத்து சேர்த்துள்ளது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் மாதம் அன்று பிறப்பித்த அரசாணை மற்றும் டெல்லி சிறப்பு காவல் படை சட்டத்தின் (DSPE Act) கீழ் கடந்த ஜூன் 4- ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட அனுமதி உத்தரவுகளின்படி ரங்கராஜ் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் மீது முறைப்படி சிபிஐ வழக்கு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN