பள்ளி அருகே செயல்பட்ட பட்டாசு மூலப்பொருள் குடோன் அகற்றம் - காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
விருதுநகர், 19 ஜூன் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, நடிகை ஶ்ரீதேவி குடும்பத்துக்கு சொந்தமான பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிப்பு குடோனை காவல்துறையினர் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். சிவகாசி அ
பட்டாசு குடோன்


விருதுநகர், 19 ஜூன் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, நடிகை ஶ்ரீதேவி குடும்பத்துக்கு சொந்தமான பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிப்பு குடோனை காவல்துறையினர் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.

சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமம், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொந்த ஊராகும். இங்கு அவரது பெரியப்பா ராமசாமி மற்றும் தந்தை ஐயப்பன் ஆகியோரால் தொடங்கப்பட்ட பாரதி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளி வகுப்பறை சுவரை ஒட்டியவாறு பட்டாசு தயாரிப்புக்கு தேவையான ரசாயன மூலப்பொருட்கள் மற்றும் காகிதக் குழாய்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோன் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதையடுத்து சிவகாசி டிஎஸ்பி அனில் குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த பட்டாசு மூலப்பொருட்கள் தயாரிப்பு குடோன் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், குடோன் உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன், பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam