Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 19 ஜூன் (ஹி.ச.)
எல்லையில் நின்று நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் தியாகம் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம்.
ஆனால் அந்தத் தியாகத்தின் உண்மையான முகத்தை சிலர் மட்டுமே தங்கள் வாழ்க்கையால் நிரூபிக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு மாவீரனை தமிழகம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்.
திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில், வீட்டில் கைக்குழந்தை காத்திருக்கிறது.
குடும்பத்தின் அன்பும் பாசமும் ஒரு புறம் இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பே தனது முதல் கடமை என்ற உணர்வோடு எல்லையில் பணியாற்றியவர் அவர்.
தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையின்போது,
சக ராணுவ வீரர் ஒருவர் உயிரிழக்கிறார்.
கடுமையான துப்பாக்கிச் சண்டையில் இவரது முகம் மற்றும் வலது தோள்பட்டையில் குண்டுகள் பாய்கின்றன.
முகத்தாடை சிதைந்து, கைகளிலும் குண்டுகள் துளைத்துச் செல்கின்றன.
ரத்தம் பெருமளவில் வெளியேறிய நிலையிலும், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருந்தபோதும் அவர் பின்வாங்கவில்லை.
மாறாக, அசாதாரண வீரத்துடன் முன்னேறி, மிக அருகில் சென்று தீவிரவாதியை சுட்டு வீழ்த்தி தனது சக வீரர்களின் உயிரைக் காப்பாற்றினார்.
கடமையின் மீது கொண்ட அர்ப்பணிப்பும், நாட்டின் மீது கொண்ட பற்றும் அந்த தருணத்தில் வெளிப்பட்டது.
பின்னர், என்னோட இடத்துல அவங்க எப்படி வரலாம்? அதான் காலி பண்ணிட்டேன், என்று அவர் சாதாரணமாக கூறிய வார்த்தைகள், அவரது மன உறுதியையும் வீரத்தையும் வெளிப்படுத்துகின்றன.
அந்த வார்த்தைகளில் தேசபக்தியின் தீயும், ராணுவ வீரனின் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஒலிக்கின்றன.
அவரது வீரத்தைப் பாராட்டி மத்திய அரசு கீர்த்தி சக்கரா விருது வழங்கியதும், தமிழக அரசு ரூ.48 லட்சம் நிதியுதவி அறிவித்ததும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்,சொந்த ஊருக்கு அவர் திரும்பியபோது, பொதுமக்கள் “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கங்களுடன் வரவேற்றனர்.
கம்பம் தொகுதி தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா அவருக்கு பொன்னாடை அணிவித்து காலில் விழுந்து மரியாதை செலுத்திய நிகழ்வும் மக்களின் நன்றியுணர்வை பிரதிபலித்தது.
இவர்களைப் போன்ற வீரர்கள்தான் நமது நாட்டின் உண்மையான எல்லைச்சாமிகள். அவர்கள் எல்லையில் விழித்திருப்பதால்தான் நாம் நிம்மதியாக உறங்க முடிகிறது. இவர்களின் தியாகம், துணிச்சல், தேசப்பற்று ஆகியவை இளைய தலைமுறைக்கு என்றும் ஒரு உத்வேகமாக இருக்கும்.
இவர்களைப் போன்ற மாவீரர்கள் இருக்கும் வரை, இந்தியாவின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. அவர்களின் வீரத்திற்கு தலை வணங்குவோம்!
Hindusthan Samachar / VINOTH KUMAR P