Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 19 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைப் பகுதி வழியாக பைபர் படகில் பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் ஏராளமான ஷாம்பு பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 51 பெட்டிகளில் 48,960 ஷாம்பு பாக்கெட்டுகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் கடல் மார்க்கமாக பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மரிய நிசாந்தன் என்ற ஆட்டோ ஓட்டுநரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடத்தலுக்காக பயன்படுத்தப்பட இருந்த ஆட்டோவும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN