Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசின் நிதிநிலை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில்,
திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி தவெக அரசும் மக்கள் நலத் திட்டங்களில் பாரபட்சம் காட்டக் கூடாது என முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், நிதியமைச்சர் மேரி வில்சன் வெறும் கடன் விவரங்களை மட்டுமே வாசித்ததாகவும், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து சட்டமன்றத்தில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் கடன் சுமை குறித்து தேர்தலுக்கு முன்பே அனைவருக்கும் தெரிந்திருந்த நிலையில், திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாதம் ரூ.2,500 மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கு ரூ.4,000 நிதியுதவி, பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் ஏன் வழங்கப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் தேர்தல் வாக்குறுதிகளை நம்பியே ஆட்சியை ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், திமுக அரசின் கடன் சுமையை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால் அதை தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P