Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 19 ஜூன் (ஹி.ச.)
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்,
தமிழ்நாட்டில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு வித்தியாசமான அணியினர், எதிர்பாராத வகையில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.
ஜனநாயகத்தில் இதுபோன்ற இடைக்கால மாற்றங்கள் வருவது நல்லது. முந்தைய ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை கொண்டு நிறுத்திய இடத்திலிருந்து, இந்த புதிய ஆட்சியாளர்கள் மாநிலத்தை இன்னும் அடுத்தக்கட்ட முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
மீனவர் பிரச்சினை என்பது இரு தரப்பிலும் மனிதாபிமானரீதியாக அணுக வேண்டிய ஒரு விஷயம். சட்டமீறல்கள் என்ற விவகாரத்தையும் தாண்டி, மக்களின் வாழ்வாதாரத்தை இதில் கவனத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பிலும் சில விட்டுக்கொடுப்புகளோடு இதற்கு சுமூக முடிவு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், இந்திய அரசும், இலங்கை அரசு மற்றும் யாழ்குடா நாட்டு மீனவர் சமூகத்தோடு இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.
எங்களது மீன்பிடித்துறை அமைச்சர் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வருகை தந்து இங்குள்ள அரசியல் தலைவர்களுடனும், மத்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது ராஜதந்திர மட்டத்தில் பேசி தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்பதால், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இப்போது கருத்து கூறுவது கடினம் என தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் தற்போதைய வாழ்வாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து பேசிய இலங்கை எம்.பி., தற்போதைக்கு விலைவாசி விவகாரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்துக் கொண்டு தான் செல்கிறது.
சர்வதேச நாணய மாற்று விகிதத்தில் இலங்கை நாணயம் சந்தித்துள்ள வீழ்ச்சி, இறக்குமதியாளர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. கச்சா எண்ணெய், உரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான இறக்குமதி இதனால் முடங்கியுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின்படி கடன்களை மறுசீரமைப்பு செய்ய எங்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கச்சா எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக எங்களின் அந்நியச் செலாவணி இருப்பு வேகமாக கரைந்து வருகிறது. சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்த அளவை விட கையிருப்பு குறைந்து வருவது நாட்டுக்கு மேலும் ஒரு கடன் சுமையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் உள்ளது. பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாம் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.
இந்த இரண்டு விஷயங்களிலும் தற்போதைய இலங்கை அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அதற்கான தாராளமான ஊக்கத் தொகைகளையும், சாதகமான சூழலையும் ஏற்படுத்தித் தர இலங்கை அரசு தயாராக இருக்கிறது. இதனை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN