Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 ஜூன் (ஹி.ச)
சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவேரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பேசியபோது, காவிரி நடுவர் மன்றம் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வழங்கிய இறுதித் தீர்ப்பையும், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் கருத்தைக் கேட்காமலும், மத்திய அரசின் எந்த அனுமதியையும் பெறாமலும் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
மேகதாது அணைத் திட்டத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. மேலும், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதும் முக்கியமானதாகும்.
அதேபோல், பிற படுகை மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் மத்திய அரசின் அனுமதி இன்றி காவிரி படுகையில் எந்த புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டத்தையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதையும் வரவேற்கிறோம். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வளக் குழுமத்திடம் வலியுறுத்தியிருப்பதும் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.
தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சட்டப்பேரவை ஒருமனதாக ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில், காவேரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம் மூலமாக தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டும் முயற்சிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். கர்நாடக அரசுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டிய அவசியமில்லை என்பதையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ