Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச)
தமிழகத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் நோக்கில், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று மாலை டெல்லி செல்கிறார்.
அவர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அண்மையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை அமைப்பு, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தியிருந்தார்.
அந்த ஆலோசனையின் தொடர்ச்சியாக, மாநிலத்தின் முக்கிய சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் முன்வைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்கள், புதிய புறவழிச்சாலைகள், நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மேம்பாலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ