Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திருச்சியில் நடைபெற்ற முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றமளிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேட்டூர் அணை திறப்பு, குறுவை சாகுபடிக்கான சிறப்பு திட்டங்கள், மேகதாது அணை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு, நெல் மற்றும் கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவது, பயிர்க்கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வது, உரம் விலை உயர்வு, கொள்முதல் நிலைய பிரச்சினைகள், மணல் கொள்ளை தடுப்பு, தடுப்பணை அமைப்பு உள்ளிட்ட விவசாயிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் பேசாதது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடாமல், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையிலான அரசியல் பேச்சிலேயே முதல்வர் ஈடுபட்டதாகவும், தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காக்கும் வகையில் இனியாவது உழவர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ