Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
சென்னை ஐயப்பன்தாங்கல் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து சேவை தாமதமானது.
ஐயப்பன்தாங்கல் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், ஓட்டுநர் அல்லது நடத்துனர் யாரேனும் பணிக்கு வராத நாட்களில், மற்றொரு பணியாளருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக சம்பள பிடித்தமும் செய்யப்பட்டதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆள்பற்றாக்குறையை சரிசெய்வது போக்குவரத்து துறையின் பொறுப்பு என்றும், அதற்காக தங்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி சம்பளத்தை பிடித்தம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போக்குவரத்து அதிகாரிகளை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேருந்து இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சேவை தாமதமானது.
பின்னர் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இனிமேல் கட்டாய விடுப்பு வழங்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P