2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதன்மைப் பயிற்றுநர் பயிற்சி முகாம் சென்னையில் தொடக்கம்
சென்னை, 02 ஜூன் (ஹி.ச.) இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ முன்னிட்டு, முதன்மைப் பயிற்றுநர்களுக்கான நான்கு நாள் தீவிரப் பயிற்சி முகாம் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடைபெற்றது. 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்
Census


சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)

இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ முன்னிட்டு, முதன்மைப் பயிற்றுநர்களுக்கான நான்கு நாள் தீவிரப் பயிற்சி முகாம் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடைபெற்றது.

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, தமிழ்நாட்டில் 2026 ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடத்தப்பட உள்ளது.

இதற்கு முன்பாக, 2026 ஜூலை 17 முதல் 15 நாட்கள் சுய-கணக்களித்தல் நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் இணையவழியில் தாங்களே தகவல்களை பதிவு செய்து கணக்கெடுப்பில் பங்கேற்க முடியும்.

தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட முதன்மைப் பயிற்றுநர்களுக்கான பயிற்சி முகாம், மே 11 முதல் 14 மற்றும் மே 18 முதல் 21 வரை மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

முதல் இரண்டு கட்டப் பயிற்சிகள் மே 11 அன்று தொடங்கிய நிலையில், 73 முதன்மைப் பயிற்றுநர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளின் இயக்குநரும், முதன்மை தலைமை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரியுமான திரு சுந்தரேஷ் பாபு, 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து விளக்கமளித்தார்.

இந்தியாவில் முதன்முறையாக செல்பேசி செயலி மூலமும், சுய-கணக்களித்தல் முறையிலும் தரவுகள் சேகரிக்கப்படும் டிஜிட்டல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் சிறப்பம்சங்களையும் எடுத்துரைத்தார்.

முக்கிய உரையாற்றிய தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், மாநில ஒருங்கிணைப்பு அதிகாரியுமான திருமதி பி. அமுதா, துல்லியமான தரவுகள், தரமான பயிற்சி மற்றும் வீடு வீடாகச் சென்று மக்களுடன் ஏற்படுத்தப்படும் நம்பிக்கையான உறவுகள் ஆகியவை வெற்றிகரமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடித்தளமாகும் என்று வலியுறுத்தினார்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் துறைச் செயலாளர் திரு சஜ்ஜன்சிங் ஆர். சவான், பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரங்களும், தகவல் ரகசியத்தன்மையை உறுதி செய்வதும் மிகவும் அவசியம் என தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 37 முதன்மைப் பயிற்றுநர்களுக்கான மூன்றாவது கட்டப் பயிற்சி, மே 18 முதல் 21 வரை நடைபெற உள்ளது. 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ