சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு இருக்கலாம் - வைகோ ஆதங்கம்
சென்னை, 02 ஜூன் (ஹி.ச.) மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குநாடு இளைஞர் பேரவ
Vaiko


சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

திமுக கூட்டணியில் உறுதியாக இருந்து பரப்புரை செய்தேன். திமுக வாக்குகளால் இரண்டு தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. திமுக வெற்றிக்கும் மதிமுக உதவியது.

தேமுதிக, விசிக, காங்கிரஸ் என திமுக கூட்டணியில் அதிக தொகுதி கொடுத்தார்கள்.

மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் என்ற நிலை, எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு சங்கடம் ஏற்பட்டது. எங்கள் சின்னத்தில் போட்டியிட்டு இருக்கலாம் என ஆதங்கத்தில் கட்சியில் உள்ள தோழர்கள் இருந்தார்கள்.

அதே ஆதங்கத்தில் தான் துரை வைகோ பேசி இருக்கிறார்.

திமுக ஆதரவோடு போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி நன்றி கூட சொல்லாமல் த.வெ.கவுக்கு சென்று விட்டது.

காங்கிரஸ் ராஜ்யசபாவில் இடம் வாங்கி விட்டு தற்போது மந்திரி சபையிலும் இடம் வாங்கி விட்டார்கள். அவர்களுடனும், விசிகவோடும் எங்களை எப்படி ஒப்பிட்டு பேச முடியும்? தற்போது வரையிலும் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம். பொதுக்குழுவில் எல்லோரின் முடிவுகளும் பேசப்பட்டு அதற்குப் பிறகு தான் முடிவெடுக்கப்படும் என்றார்.

முன்னதாக மேடையில் உரையாற்றிய அவர்,

கர்நாடகா அரசு தமிழக மக்களை வஞ்சிக்க வேண்டாம். மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் ஐந்து கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அணை கட்டுங்கள் என கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்.

மத்திய அரசு அனுமதி கொடுக்க கூடாது. தமிழக மக்களை வஞ்சிக்கும் சூழலை ஏற்படுத்த கூடாது.

அணை கட்டும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டால் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம். மத்திய அரசின் அலுவலகம் ஸ்தம்பித்து இருக்கிறது என்ற தகவலை டெல்லிக்கு சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. தமிழகத்தின் உரிமையை பறித்தால் இனி நெய்வேலி சுரங்கம், ஆவடி டேங் தொழிற்சாலை உட்பட தமிழகத்துக்கு தான் சொந்தம் என சொல்ல வேண்டிய நிலை வரும் என்றார்.

தமிழக ஆளுநர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,

இதற்கு முன் இருந்த ஆளுநர்களை விட தற்போது இருக்கும் ஆளுநர் மோசமாக இருக்கிறார்.

திருவள்ளூர் படத்திற்கு காவி உடை ஏற்க முடியாது. சாதி, மதம் எதுவும் இல்லாமல் இருப்பவர் திருவள்ளுவர்.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகை எதிரே வந்து கருப்பு சட்டை, கருப்பு கொடியோடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த போகிறோம் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN