Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
சென்னை மதுறைமுகத்தில் பல்வேறு தொழில்துறை பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சல்பர், அதிக வெப்பநிலை காரணமாக வேதியியல் மாற்றம் அடைந்து வெண்புகையாக பரவி வருவதாக துறைமுக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், சல்பேட் வாயு கசிவு தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சல்பேட் வாயுவின் தாக்கத்தால் குமட்டல், வயிற்றுவலி, கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக அளவிலான வாயு கசிவு ஏற்பட்டால் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
PM 2.5, PM 10 நுண்துகள்களுடன் சேர்த்து NO2 (நைட்ரஜன் டை ஆக்சைடு), NH3 (அம்மோனியா) போன்ற வாயுக் கலவைகளும் காற்றில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக காற்று மாசு கண்காணிப்பில் நுண்துகள்கள் மட்டுமே அதிகமாக கண்டறியப்படும் நிலையில், தற்போது வாயுக் கலவைகளும் பதிவாகியிருப்பது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள வாயு கசிவு காரணமாக காற்றின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam