Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 02 ஜூன் (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21-ஆம் தேதி மாலை அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு வராததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மறுநாள் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், குற்றச்சம்பவத்தை மறைக்க அவரது நண்பரான மோகன்ராஜ் உதவியதாகவும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சிறுமிக்கு எதிராக நடைபெற்ற கொடூர குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு, இருவரின் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கைது செய்யும் நடவடிக்கையின்போது கார்த்திக் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டடத்தின் மீது இருந்து கீழே விழுந்ததில் அவரது வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு காவல் துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
காவல் விசாரணையின் மூலம் குற்றச்சம்பவம் நடைபெற்ற விதம், பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள், குற்றத்திற்கு முன் மற்றும் பின் நடந்த நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் அறிவியல் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை முழுமையாக திரட்டி விசாரணையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறுமி கொலை வழக்கில் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மீது பொதுமக்கள் கவனம் திரும்பியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN