மக்காச்சோளம் கொள்முதலில் நூதன மோசடி – கூடுதல் சாக்கு சேர்த்து விவசாயிகளை ஏமாற்ற முயன்ற வியாபாரி லாரி சிறைபிடிப்பு
சென்னை, 02 ஜூன் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.நெமிலி கிராமத்தில், மக்காச்சோள கொள்முதலின் போது கூடுதல் சாக்கு சேர்த்து விவசாயிகளை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆத்திரமடைந்த விவசாயிகள் லாரியை சிறைபிடித்து
நெல்


சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.நெமிலி கிராமத்தில், மக்காச்சோள கொள்முதலின் போது கூடுதல் சாக்கு சேர்த்து விவசாயிகளை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆத்திரமடைந்த விவசாயிகள் லாரியை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரமான உ.நெமிலி, வடகுரும்பூர், ஆதனூர், நெய்வணை, வண்டிபாளையம், பாதூர், பாண்டூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் உலர் கலங்களில் சேமித்து விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தனியார் வியாபாரி ஒருவர் லாரியுடன் உ.நெமிலி கிராமத்திற்கு சென்று மக்காச்சோளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

வழக்கமாக விவசாயிகள் சாக்குகளை கணக்கிட்டு வைத்து, ஒவ்வொரு சாக்காக எடைபோட்டு லாரியில் ஏற்றுவார்கள். அதன்படி 50 சாக்குகள் கணக்கிடப்பட்ட நிலையில், மக்காச்சோளம் ஏற்றும் பணி நடைபெற்றது.

ஆனால், விவசாயிகளின் கணக்குப்படி 36 மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டிருந்த போதிலும், சாக்குகளின் எண்ணிக்கை குறையாமல் இருந்ததால் விவசாயிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் மீண்டும் சாக்குகளை எண்ணியபோது, கணக்கில் மாற்றம் இல்லாதது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, எடைபோட்ட மூட்டையை லாரியில் ஏற்றிய பிறகு, விவசாயிகளுக்கு தெரியாமல் லாரியில் இருந்து கூடுதல் சாக்கை எடுத்து வந்து மீண்டும் கணக்கில் சேர்த்து நூதன முறையில் மோசடி செய்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

ஆத்திரமடைந்த விவசாயிகள் தனியார் வியாபாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, லாரியை சிறைபிடித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P