Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்தும், வரும் ஜூன் 4-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மேற்காசிய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும், இதன் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலை காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள் உள்ளிட்ட சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.46 உயர்த்தப்பட்டு ரூ.3,283 ஆக விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் டீ உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வுக்கு ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமான விலை நிர்ணய முறை மற்றும் அதிகப்படியான வரிவிதிப்புகளே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
எனவே பெட்ரோல், டீசல் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை கண்டித்தும், ஜூன் 4-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ