Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர் , 02 ஜூன் (ஹி.ச.)
விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடித் திட்டத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு எவ்வித பயனும் அளிக்காது என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
நிலத்தின் அளவு, பயிர் வகை, கடன் பெற்ற ஆண்டு போன்ற வரையறைகளுடன் கூடிய தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பருவமழை பொய்த்ததாலும், இடுபொருட்களின் விலை உயர்வாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே அரசு கருணையுடன் பரிசீலித்து அனைத்து விவசாய கடன்களையும் ஒரே தவணையில் ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாய சங்கத் தலைவர்கள் முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர் கையில் வெற்று பானைகளுடனும், கிழிந்த வேட்டிகளுடனும் தங்களது வறுமை நிலையை வெளிப்படுத்தினர். அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நிபந்தனையற்ற கடன் தள்ளுபடியை அறிவிக்காவிட்டால், மாவட்டம் முழுவதும் தொடர் மறியல் போராட்டங்களை நடத்தப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில், விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
Hindusthan Samachar / vidya.b