Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
சென்னை நெற்குன்றம் பகுதியில் பட்டபகலில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்த 4 பேர், கஞ்சா போதையில் பெண்களை கத்தியால் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் 4 பேர் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்களிடம் தகராறு செய்து, கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், கடையில் இருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அதை பெண்கள் தடுக்க முயன்றபோது, அவர்களையும் கத்தியால் மிரட்டி அச்சுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டபகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதி மக்கள் மற்றும் மீன் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரியும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோயம்பேடு போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P