Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச)
கேரளம் மற்றும் தமிழகப் பகுதிகளில் 2 நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, தர்மபுரி மாவட்டம்
திருமல்வாடி, வெள்ள கவுண்டன்பாளையம் பகுதிகளில் தலா, 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை கேரள மாநில பகுதிகளில் 2 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும், கிழக்கு விதர்பா முதல் தெற்கு கேரளம் பகுதிகள் வரை தெலங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழியாக சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 2) முதல் 7-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
3, 4-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி. மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் திருமல்வாடி, வெள்ளைகவுண்டன் பாளையத்தில் தலா 9 செ.மீ, சிவகங்கை மாவட்டம் ஒக்கூர், ஈரோடு மாவட்டம் எலந்தகுட்டைமேடில் தலா 8 செ.மீ, சேலம் மாவட்டம் எடப்பாடி, புதுக்கோட்டை மாவட்டம் காரையூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b