தொடர் கனமழையால் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – 8வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி, 02 ஜூன் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 783 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வ
அணை


கிருஷ்ணகிரி, 02 ஜூன் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கேஆர்பி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 783 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூர், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை, பர்கூர், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பகலில் வெயில் வாட்டினாலும், மாலை 6 மணிக்கு பின்னர் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த வாரம் கேஆர்பி அணைக்கு வினாடிக்கு 12 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது படிப்படியாக உயர்ந்து இன்றைய நிலவரப்படி 967 கனஅடியாக பதிவாகியுள்ளது.

கேஆர்பி அணையின் மொத்த உயரம் 52 அடி. தற்போது நீர்மட்டம் 50.20 அடியை எட்டியுள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 783 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு 8வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P