Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் கூடுதல் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் அடுத்த 45 நாட்களுக்கு இந்த ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பருவமழை தீவிரமடையும் போது ஏற்படக்கூடிய மின்கம்பி அறுபடுதல், மின்மாற்றி பழுது, மரங்கள் விழுந்து மின்தடை ஏற்படுதல் போன்ற அவசரகால பணிகளை உடனடியாக சரிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக தேவைக்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஒப்பந்த பணியாளர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மின்வாரியம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உறவினர்களை எந்த காரணத்தை முன்னிட்டும் ஒப்பந்த பணியில் அமர்த்தக் கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை மீறுவோர் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரிய தலைமை எச்சரித்துள்ளது.
பருவமழை காலங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள், அவசரகால வாகனங்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் கூடுதல் பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பார்கள் என்பதால் மின்தடை புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b