கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு - தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 02 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் கோயில் நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நடைபெற்றுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்
Petition seeking removal of encroachments on temple lands


மதுரை, 02 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் கோயில் நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நடைபெற்றுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான பல்வேறு சொத்துக்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுவில், மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஜமாபந்தி தணிக்கை முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் கோயில் நிலங்கள், குளம், குட்டை, ஏரி, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோயில் நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தரப்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், பொதுப்பணித் துறை செயலர், வருவாய்த் துறை செயலர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீர்நிலைகள் மற்றும் கோயில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில், ஜமாபந்தி தணிக்கையை முறையாக நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / vidya.b