முக்கிய பேருந்து நிலையங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை, 02 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாட்டின் முக்கிய பேருந்து நிலையங்களில் போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக
பிரேமலதா


சென்னை, 02 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாட்டின் முக்கிய பேருந்து நிலையங்களில் போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு போதுமான அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், பல முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன், நேரத்திற்கேற்ப சேவைகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த பிரச்சினையில் போக்குவரத்து துறை அமைச்சர் தனி கவனம் செலுத்தி, முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக பயணிகள் பயன்படுத்தும் வழித்தடங்களில் உடனடியாக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு போக்குவரத்து சேவையை மேம்படுத்தி, மக்களின் குறைகளை விரைவாக தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகைக் காலங்கள், பள்ளி திறப்பு நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, அரசு கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்கி மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P