2,000 ஆண்டுகளுக்கு முந்தைய 'தமிழி நடுகல்' கண்டுபிடிப்பு
ராமநாதபுரம், 02 ஜூன் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகப் பழமையான முதல் தமிழி நடுகல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ''சேதுபதி சீமை'' என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே ஆப்பனூர் என்ற கிராமம் உள்ளது
Inscription


ராமநாதபுரம், 02 ஜூன் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகப் பழமையான முதல் தமிழி நடுகல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'சேதுபதி சீமை' என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே ஆப்பனூர் என்ற கிராமம் உள்ளது.

இங்குள்ள ஆண்டியேந்தல் பகுதியில் அமைந்திருக்கும் அரியநாச்சி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் புதையுண்டு கிடந்த கல் ஒன்றை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு திருப்பணியின் போது பொதுமக்கள் மீட்டெடுத்தனர்.

அந்தக் கல்லை அங்குள்ள மரத்தின் அருகே வைத்திருந்த நிலையில், இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் முனியசாமி அதனை கண்டுள்ளார்.

பின்னர், இதுகுறித்து மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து ஆய்வு மைய செயலாளரும் தொல்லியல் அறிஞருமான சாந்தலிங்கம், உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் ஆப்பனுருக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அக்குறிப்பிட்ட கல்வெட்டை படியெடுத்து வாசித்தனர். கல்வெட்டில் உள்ள வாசகம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்து வரி வடிவத்தில் எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது.

அக்குறிப்பிட்ட எழுத்து வடிவத்தில் புள்ளி வைத்த எழுத்துக்கள் அப்போது இல்லை. அந்த அடிப்படையிலேயே எழுத்துருக்கள் வெட்டப்பட்டுள்ளன. அந்நடுகல் வெங்கச் செங்கல் எனும் வகையைச் சேர்ந்த ஒரு கல்லாகும்.

அக்கல்வெட்டில் உள்ள வாசகம் பின்வருமாறு, ‘ஆ பன்னூர் ஏறிய மாண்டு விழுந்த அத்தியன் கீரன்கல்’ என்பதாகும்.

ஆப்பனுார் மேல் சண்டையிட்டு மாண்டு விழுந்து போன வீரன் அத்தியன் கீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பது இக்கல்வெட்டின் பொருளாகும்.

அத்தியன் என்பது தந்தை பெயராகவும் அவனது மகன் கீரன் என்பது இறந்து போன வீரன் பெயராகவும் உள்ளதாகக் கருதலாம் என்கிறார் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்.

மேலும் அவர் கூறுகையில்,

ராமநாதபுரம் மாவட்டத்திலேயே இதுதான் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதல் தமிழி நடுகல் கல்வெட்டு. இக்கல்வெட்டின் காலத்தை அறிய தொல்லியல் அறிஞர்களான சுப்பராயலு, மார்க்சியகாந்தி, ராஜகோபால் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களும் இக்கல்வெட்டின் உண்மைத் தன்மையையும், காலத்தையும் உறுதி செய்துள்ளனர்.

ஆப்பனூர் என்ற பெயரே 2,000 ஆண்டுகளுக்கு முன்பும் வழக்கத்தில் இருந்துள்ளது. தற்போதும் அதே பெயரே தொடர்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி.

பாண்டிய நாட்டில் பாடப்பெற்ற 14 சிவத்தலங்களில் இத்தலமும் ஒன்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN