திருப்புவனம் அஜித்குமார் வீட்டில் அதிகாலையில் விசாரணை ஏன்? - காவல் துறை விளக்கம்
சிவகங்கை, 02 ஜூன் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி காவல்துறையினரின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்ப
Ajith Kumar


சிவகங்கை, 02 ஜூன் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி காவல்துறையினரின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது.

வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை காவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கும், முக்கிய சாட்சிகளுக்கும் காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2.40 மணியளவில் அஜித்குமார் வீட்டிற்கு வந்த மூவர் தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி கதவைத் தட்டி விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் ஆறு நிமிடங்கள் நடைபெற்ற விசாரணையின் போது, மதுரை பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு இப்பகுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை பார்த்துள்ளீர்களா? என்றும் கேட்டுள்ளனர்.

இதற்கு அஜித்குமாரின் தாய் மாலதி மற்றும் தம்பி நவீன்குமார் தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த மூவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனால் வீட்டிற்கு வந்தவர்கள் உண்மையில் காவல் துறையினர்தானா? என்ற சந்தேகமும் அச்சமும் குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, மதுரை மாவட்டம் குன்னத்தூர் காவல்துறையினர் பெண் காணாமல் போன புகார் தொடர்பாக, இந்தப் பகுதியில் ஒருவர் ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வீடு வீடாக விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால், அஜித்குமார் குடும்பத்தினருக்கு பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவலர் வீட்டின் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், வீட்டிற்கு யார் வந்தார்கள், யார் சென்றார்கள் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை என்றும் நவீன்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தனது கடமையை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும், அஜித்குமார் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொறுப்புள்ள காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN