தூய்மை பணியாளர்களை சிகிச்சைக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழ்நாடு, 02 ஜூன் (ஹி.ச.) அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அத
சுகாதாரத்துறை


தமிழ்நாடு, 02 ஜூன் (ஹி.ச.)

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அரசு மருத்துவமனைகளில் துறை மருத்துவர்கள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க பணியில் இருக்க வேண்டும்.

மற்ற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும். மருத்துவ அதிகாரி (RMO) காலை 7 மணி முதல் மருத்துவமனையின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும், கண்காணிப்பாளர்கள் காலை 8 மணி முதல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல் மருத்துவம் மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட புறநோயாளிகள் பிரிவுகள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு அல்லது செவிலியர் பயிற்சி பெறாத தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தகுதியற்ற நபர்களை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவோ, ஊசி செலுத்தவோ அனுமதிக்கக் கூடாது என சுகாதாரத்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.

தகுதியற்ற நபர்கள் மூலம் சிகிச்சை அளிப்பது சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், நோயாளிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருந்தபடியே சிகிச்சை பொறுப்பை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பது அல்லது பணிக்கு வராமல் முதலுதவி வழங்க வழிகாட்டுவது போன்ற செயல்கள் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவமனைகளின் செயல்பாடு தொடர்பான புகார்களை பொதுமக்கள் 104 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam