திமுக ஆட்சியில் ரேசன் அரிசியை மக்கள் சாப்பிட முடியவில்லை , நிலக்கரியில் ரூ.2,000 கோடி ஊழல்– ஆதவ் அர்ஜுனா தாக்கு
சென்னை, 20 ஜூன் (ஹி.ச.) சென்னை பனையூரில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக அரசின் செயல்பாடுகள், மின்சாரத் துறை நிர்வாகம், ரேசன் அரிசி தரம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர
Aadhav


சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)

சென்னை பனையூரில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,

திமுக அரசின் செயல்பாடுகள், மின்சாரத் துறை நிர்வாகம், ரேசன் அரிசி தரம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடுமையாக விமர்சித்தார்.

மின்சாரத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக ஏற்பட்ட நிர்வாகத் தோல்விகளால் தற்போது 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

முந்தைய ஆட்சிகளில் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படாததே மின்துறையின் தற்போதைய சிக்கல்களுக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.

மேலும், நிலக்கரி கொள்முதலில் ஆண்டுக்கு ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், தரமான நிலக்கரிக்கு பில் போட்டு குறைந்த தர நிலக்கரியை வாங்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான மின்துறையில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறினார்.

ரேசன் அரிசி தொடர்பாக பேசிய அவர்,

திமுக அரசு இலவச அரிசி வழங்குவதாகக் கூறினாலும், அந்த அரிசியை மக்கள் சாப்பிட முடியாத நிலை உள்ளது. ரேசன் அரிசியை இட்லி செய்வதற்கோ அல்லது கால்நடைகளுக்கு உணவாகக் கொடுப்பதற்கோ தான் பயன்படுத்துகிறார்கள்” என்று விமர்சித்தார்.

மேலும், மக்கள் சாப்பிடக்கூடிய தரமான அரிசியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் தலைவரின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசுத் துறைகளில் தற்போது லஞ்சம் இல்லாத நிர்வாகம் நடைபெற்று வருவதாகவும், பத்திரப்பதிவுத் துறையில் கூட ஒரு ரூபாய் லஞ்சம் வாங்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை மாறி வருவதாகக் கூறிய அவர், இன்னும் மூன்று மாதங்களில் மின்சாரத் துறையில் பெரிய மாற்றங்களை தமிழக அரசு கொண்டு வரும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தேர்தல் தோல்வி தனிநபரின் தோல்வி அல்ல, திமுக நிர்வாகத்தின் மீதான மக்களின் தீர்ப்பு என்றும் அவர் விமர்சித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து இணைந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ