சென்னை துறைமுகத்தில் எம்.வி. எக்ஸ்பிரஸ் சொகுசு கப்பல் வருகை - சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு
சென்னை, 20 ஜூன் (ஹி.ச.) சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு எம்.வி. எக்ஸ்பிரஸ் என்ற பிரம்மாண்ட சொகுசு கப்பல் இன்று காலை சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. கடல் மார்க்க சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் தமிழகத்திற்கு வருகை தந்த இந்த கப்பலில்
சென்னை துறைமுகத்தில் எம்.வி. எக்ஸ்பிரஸ் சொகுசு கப்பல் வருகை -  சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு


சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)

சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு எம்.வி. எக்ஸ்பிரஸ் என்ற பிரம்மாண்ட சொகுசு கப்பல் இன்று காலை சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.

கடல் மார்க்க சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் தமிழகத்திற்கு வருகை தந்த இந்த கப்பலில் சுமார் 1800 வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்தனர்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் கப்பலில் வந்திறங்கிய பயணிகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துறைமுக நுழைவாயிலில் திரண்டிருந்த சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், பயணிகள் மீது பன்னீர் தெளித்தும், நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டும் அன்புடன் வரவேற்றனர்.

மேலும், ஒவ்வொரு பயணிக்கும் பூங்கொத்துகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தின் கலாச்சாரத்தையும், விருந்தோம்பலையும் பிரதிபலிக்கும் வகையில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, வெளிநாட்டுப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பயணிகள் சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மகாபலிபுரம், காஞ்சிபுரம் மற்றும் நகரின் பாரம்பரிய இடங்களை பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை துறைமுகத்திற்கு தொடர்ந்து சர்வதேச சொகுசு கப்பல்களின் வருகை அதிகரித்து வருவது, தமிழக சுற்றுலாத்துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்மூலம் மாநிலத்தின் சுற்றுலா வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Hindusthan Samachar / vidya.b