Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாம்பலம் பகுதியில் இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்த இளைஞரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், சென்னை தி.நகர் பகுதியில் உள்ள தனியார் கடையில் பணியாற்றி பெண்கள் விடுதியில் தங்கி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ஊரைச் சேர்ந்த வினோத்குமாரை காதலித்து வந்ததாகவும், பின்னர் அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் தொடர்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வினோத்குமார் தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்புகொண்டு காதலிக்குமாறு வற்புறுத்தியதால், அந்த பெண் பலமுறை தனது செல்போன் எண்ணை மாற்றியுள்ளார். கடந்த 18ஆம் தேதி, அவர் பணிபுரியும் கடைக்கு நேரில் சென்ற வினோத்குமார், கடை மேலாளரிடம் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவரை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அன்றைய தினம் வேலை முடித்து விடுதிக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணை, தி.நகர் உஸ்மான் சாலையில் வழிமறித்த வினோத்குமார் மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தி.நகர் காவல் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை பிடித்து மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, திருக்கோவிலூரைச் சேர்ந்த 22 வயதான வினோத்குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ