Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 20 ஜூன் (ஹி.ச.)
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பூக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவர் கூலி வேலை செய்து வந்தார்.
கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த அவருக்கு இந்து என்ற மகள் உள்ளார்.
திருமணமான இந்து, தனது குழந்தையுடன் தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று இரவு இந்துவின் கணவர் ரமேஷ், மனைவி மற்றும் குழந்தையை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த குமரவேல் மற்றும் அவரது நண்பர் சந்தோஷை லட்சுமி தடுத்து நிறுத்தி, குழந்தையுடன் பயணம் செய்யும் பகுதியில் இவ்வாறு வேகமாக செல்லக்கூடாது என கண்டித்துள்ளார்.
இதனால் இருதரப்பினருக்கும் வாய் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது லட்சுமி, குமரவேலை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மகள் மற்றும் மருமகனை அனுப்பிவைத்துவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமி மீது, ஆத்திரமடைந்த குமரவேல் அருகில் உள்ள வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், லட்சுமியின் உடலை வீட்டின் எதிரே உள்ள விவசாய நிலத்தில் வீசிவிட்டு குமரவேல் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் போலீசார் மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த குமரவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam