Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 20 ஜூன் (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாது அணை தொடர்பாக சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றதே இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், காவிரி நீர் உரிமைக்காக கடந்த 50 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி பெறப்பட்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தையும் இந்த புதிய அறிவிப்பு நீர்த்துப் போகச் செய்யும் என்று குற்றம் சாட்டினர்.
50 ஆண்டு காலம் தொடர்ந்து போராடி பெற்ற சட்டபூர்வமான உரிமையை சிதைக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாகவும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டிற்கு மறைமுகமாக வழிவகுக்கும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் நீர் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில், புதிய நடுவர் மன்றம் என்ற பேச்சு டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
எனவே புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத் தர தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / vidya.b