நாளை நீட் மறுத்தேர்வு - மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க அரசு உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை, 20 ஜூன் (ஹி.ச.) இளநிலை மருத்துவப் பட்டபடிப்பின் நுழைவுத் தேர்வான நீட் மறுத்தேர்வு நாளை ( ஜூன் 21-ஆம் தேதி) நடைபெற உள்ள நிலையில், தேர்வு குறித்த பதற்றம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் மக
Government announces helplines to alleviate student stress


சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)

இளநிலை மருத்துவப் பட்டபடிப்பின் நுழைவுத் தேர்வான நீட் மறுத்தேர்வு நாளை ( ஜூன் 21-ஆம் தேதி) நடைபெற உள்ள நிலையில், தேர்வு குறித்த பதற்றம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மனநல ஆலோசனை உதவி எண்களை அறிவித்துள்ளது.

'நட்புடன் உங்களோடு' திட்டத்தின் கீழ் செயல்படும் இந்த சேவை மூலம், மாணவர்கள் 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உடனடி மனநல ஆலோசனை பெறலாம்.

தேர்வு பயம், தோல்வி குறித்த அச்சம், குடும்ப அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசகர்கள் மூலம் டெலி கவுன்சிலிங் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் மனநிலை குறித்து ஆலோசனை பெற இந்த உதவி எண்களை பயன்படுத்தலாம் எனவும், எந்த தயக்கமும் இன்றி அழைக்கலாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை வலியுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரே காரணி அல்ல என்பதை உணர்த்தி, அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் இந்த உதவி மையங்களில் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள் மாணவர்களின் கவலைகளை கேட்டு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b