ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் மேலும் ரூ.2 கோடி மோசடி? – சுய உதவி குழு கடன், உர விநியோக முறைகேடுகள் அம்பலம்
கன்னியாகுமரி, 20 ஜூன் (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் நிதி மோசடி விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதில் ரூ.2.65 கோ
வங்கி


கன்னியாகுமரி, 20 ஜூன் (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் நிதி மோசடி விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதில் ரூ.2.65 கோடி மோசடி நடைபெற்றது மட்டுமல்லாமல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி கணக்குகள் காட்டியும், விவசாயிகளுக்கு உரம் விநியோகித்ததில் முறைகேடுகள் செய்தும் மேலும் ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2017 முதல் 2024 வரை நடைபெற்ற பரிவர்த்தனைகள் தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.2 கோடியே 65 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வங்கிப் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் வங்கியின் எழுத்தர் முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுய உதவி குழு கடன்கள் மற்றும் உர விநியோகம் தொடர்பிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மேலும் ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது மோசடி தொடர்பான ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஆறு பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதுடன், வங்கியில் இதுபோன்ற வேறு நிதி முறைகேடுகள் அல்லது போலி ஆவண மோசடிகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்தும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P