குறைந்த முதலீட்டில் மலர் விவசாயம் - சாமந்தி சாகுபடியில் அசத்தும் கிருஷ்ணகிரி விவசாயிகள்
கிருஷ்ணகிரி, 20 ஜூன் (ஹி.ச.) சாமந்தி சாகுபடி என்பது குறைந்த முதலீட்டில், குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சிறந்த மலர் விவசாயமாகும். இந்தியாவில் பண்டிகைக் காலங்களிலும் சுபமுகூர்த்த நாட்களிலும் இதற்கு எப்போதும் அதிக தேவை இருக்கிறது.
Low-Investment Flower Farming


கிருஷ்ணகிரி, 20 ஜூன் (ஹி.ச.)

சாமந்தி சாகுபடி என்பது குறைந்த முதலீட்டில், குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சிறந்த மலர் விவசாயமாகும். இந்தியாவில் பண்டிகைக் காலங்களிலும் சுபமுகூர்த்த நாட்களிலும் இதற்கு எப்போதும் அதிக தேவை இருக்கிறது.

சாமந்தியில் பொதுவாக இரண்டு முக்கிய வகைகள் பயிரிடப்படுகின்றன. முதலாவது ஆப்பிரிக்க சாமந்தி (African Marigold) இவை செடிகள் உயரமாக வளரும். பூக்கள் பெரியதாகவும், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். (எடுத்துக்காட்டு: பூசா நாரங்கி, பூசா வசந்தி). இரண்டாவது பிரெஞ்சு சாமந்தி (French Marigold). இச்செடிகள் குட்டையாக, புதர் போல் வளரும். பூக்கள் சற்றே சிறியவை.

தமிழகத்தில் சாமந்தி சாகுபடி ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக முக்கிய வணிகப் பயிராக பெருமளவில் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் மிதமான காலநிலை மற்றும் சந்தை வாய்ப்புகள் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிராமப் பகுதிகள் சாமந்தி சாகுபடியின் முக்கிய மையங்களாக விளங்குகின்றன.

குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு, நீலம், வயலட், ஆரஞ்ச் உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் சாமந்தி சாகுபடி செய்யப்படுகின்றது.

அப்பகுதி விவசாயிகள் இங்கு சாகுபடி செய்யும் பூக்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

ராயக்கோட்டை பகுதியில் போதிய மழை பெய்யாத போதிலும், மானாவாரி நிலங்களில் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயிகள் சாமந்தி சாகுபடி செய்கின்றனர்.

அதிலும் குறிப்பாக தண்ணீரை சேமிக்கவும், களை, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மல்சிங் சீட் முறையை விவசாயிகள் கடைப்பிடிக்கின்றனர். இதனால் நல்ல செடிகள் செழித்து வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,

மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய நிலத்தை இரண்டு முறை உழுது, 90 செ.மீ., இடைவெளி விட்டு பார் அமைக்க வேண்டும். இந்த பாரில் சொட்டுநீர் பாசன குழாய் அமைத்து, 30 மைக்ரான் அளவு கொண்டு மல்சிங் சீட் போட்டு, மண்ணை அணைத்து மூட வேண்டும். இதில் 25 நாட்கள் நர்சரியில் வளர்க்கப்பட்ட நாற்றுகளை மல்சிங் சீட்டில் துவாரமிட்டு அதில் நடவேண்டும்.

செடிகளுக்கு இடையே ஒரு அடி இடைவெளி விட்டு, நடவு செய்து தினமும் காலை மாலை நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மல்சிங் சீட் முறை என்பதால் தண்ணீர் மிச்சமாவதுடன், களைகள் கட்டுப்படும்.

வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்திய பூச்சி கொல்லி மருந்து அடித்து வரவேண்டும். செடிகள் நடவு செய்த 45 முதல் 60 நாட்களில் பூக்கள் பூக்க தொடங்கும். அவற்றை காலை அல்லது மாலை நேரத்தில் காம்புடன் பறித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

தற்போது ராயக்கோட்டை மண்டிகளில் மஞ்சள் சாமந்திக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஆடி மாதம் பிறந்துவிட்டால் கோயில் விழாக்கள், மக்கள் தங்கள் முன்னோருக்கு சாமி கும்பிடுவதால் பூக்களின் தேவை மேலும் அதிகரித்து சாமந்தி கிலோ ரூ.300 வரை விலை உயரும்.

என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b