Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 20 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதார்கான், சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைகண்ணு மற்றும் போலீசார் அதிகாலை 5 மணி அளவில் கஞ்சா விற்பனை தடுப்பு தொடர்பாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் மேலப்பாளையம் குலவணிகர்புரம் பஸ் நிறுத்தம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த நபர் ஒருவரை கண்டனர்.
போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற அவரை போலீசார் விரட்டி மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் மேலக்கருங்குளம், பகுதியைச் சேர்ந்த வேம்பையா (56) என்பது தெரியவந்துள்ளது.
அவர் கையில் வைத்திருந்த நீல நிற பிளாஸ்டிக் பையை போலீசார் சோதனை செய்ததில், அதில் 1.100 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வேம்பையாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையில் இருந்து மர்ம நபரிடம் கஞ்சாவை மொத்தமாக விலைக்கு வாங்கி, அதனை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து மேலப்பாளையம் பகுதிகளில் தனி நபர்களிடம் அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து வேம்பையாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN