Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 20 ஜூன் (ஹி.ச.)
சிவகாசியில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற பொதுமருத்துவ முகாமை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறுபவர்களுக்கு சட்டசபையில் ஆதாரங்களுடன் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தென்கொரியாவில் ஹூண்டாய் நிறுவனத்துடன் முதலீட்டு ஒப்பந்தத்தை மறுஉறுதி செய்துள்ளதாகவும், மேலும் இரண்டு நிறுவனங்களுடன் விரைவில் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 30 நாட்களில் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொழில் முதலீடுகள் என்பது நீண்டகால செயல்முறையாகும் என்றும், வெறும் 30 நாட்களில் எந்த நிறுவனமும் திடீரென மாநிலத்தை விட்டு வெளியேற முடியாது என்றும் கூறிய அமைச்சர், முந்தைய ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் செயலாக்க குறைபாடுகளால்தான் சில முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு சென்றதாக குற்றம்சாட்டினார்.
தமிழகத்தை விட்டு எந்த முதலீட்டாளர்கள் எப்போது, ஏன் வெளியேறினார்கள் என்பது குறித்த அனைத்து விவரங்களும் என்னிடம் உள்ளன. சட்டசபையில் கேள்வி எழுப்பினால் ஆதாரத்துடன் பதிலளிப்பேன் என அவர் சவால் விடுத்தார்.
முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை விமர்சித்த அவர், இன்னும் தொழில்துறை அமைச்சராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் அவரை நிராகரித்து எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்றார்.
மேலும், அரசின் நிதிநிலை குறித்து பேசுகையில், “கடன் வாங்காமல் எந்த குடும்பமும் இயங்காது. அதுபோல அரசும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக கடன் வாங்குவது தவறல்ல. முக்கியமானது அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதே என்றார்.
கோவிட் பாதிப்பை மட்டும் காரணம் காட்டி நிதிநிலை சரிவை நியாயப்படுத்த முடியாது என்றும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களும் கோவிட் பாதிப்பை சந்தித்த போதிலும் வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகளை பயன்படுத்தி தற்போதைய ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர், “முதல்வர் விஜய் தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுவே தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம்” என்றார்.
மேலும், ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து பொதுசேவை செய்யும் எண்ணம் இருந்தால் சாதாரண மக்களும் எம்.எல்.ஏ. ஆக முடியும் என்ற அரசியல் சூழலை தமிழகத்தில் உருவாக்கியவர் முதல்வர் விஜய் என புகழாரம் சூட்டினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P