Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 20 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடியை சேர்ந்த மாலுமி நிஷாந்த் உயிர்த்தநாதன் (35) எம்டி செலஸ்டியல் என்ற கப்பலில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், ஈரான் போர் காரணமாக எம்டி செலஸ்டியல் கப்பல் எங்கும் செல்ல முடியாமல் ஓமன் நாட்டில் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, நிஷாந்த் உயிர்த்தநாதனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சை உதவி ஏதும் கிடைக்காததால், அவர் கப்பலிலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மறைந்த நிஷாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி சரோவினை சந்தித்து இன்று (ஜூன் 20) ஆறுதல் கூறினார்.
இச்சந்திப்பின்போது, தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கும், கப்பல் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தருவதற்கும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரோவின் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
மாலுமியின் உடலை தாயகம் கொண்டுவர தேவையான அனைத்து உதவிகளையும் வெளியுறவுத் துறை மூலம் மேற்கொள்வதாகவும், கப்பல் நிறுவனத்துடன் பேசி குடும்பத்திற்கு சேர வேண்டிய இழப்பீட்டைப் பெற்றுத் தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்தார்.
ஓமனில் பணியின்போது நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் குரூஸ்புரம் மீனவ கிராம மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b