Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 20 ஜூன் (ஹி.)
காசா மற்றும் மேற்கு கரையில் நிலவும் கடுமையான போர் சூழ்நிலை மற்றும் மனிதாபிமான நெருக்கடி காரணமாக அங்குள்ள சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலையும் நிலைக்கு சென்றுள்ளதாக பாலஸ்தீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அவசர மருத்துவ உதவியை வழங்குமாறு இந்தியாவிடம் உருக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவையும் இந்திய மக்களையும் தவிர வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்?” எனக் கூறியுள்ள தூதரகம், உயிர்களை காப்பாற்ற உடனடி சர்வதேச தலையீடு அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.
காசா பகுதியில் தொடரும் ராணுவ தாக்குதல்கள், மருத்துவ உள்கட்டமைப்புகள் சேதம், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கடும் பற்றாக்குறை, நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அங்குள்ள சுகாதார அமைப்பு “முழுமையான சரிவின் விளிம்பில்” இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் அவசர மருத்துவ வெளியேற்றத்திற்காக காத்திருப்பதாகவும், சுத்தமான நீர் பற்றாக்குறை, கழிவுகள் குவிதல் மற்றும் நோய்கள் வேகமாக பரவுதல் ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் தூதரகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
சமீபத்தில் இந்தியா அறிவித்த ‘ஆரோக்கிய மைத்ரி’ திட்டத்தின் கீழ், மனிதாபிமான நெருக்கடிகளில் பாதிக்கப்படும் நாடுகளுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இதனை முன்னிட்டு, பாலஸ்தீன தூதரகம் இந்தியாவிடம் இந்த அவசர உதவி கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த கோரிக்கைக்கு இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
காசா பகுதியில் மனிதாபிமான நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா தொடர்ந்து கவலை வெளியிட்டு வரும் நிலையில், உடனடி சர்வதேச உதவி அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA