Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 20 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே பெரிய சப்படி கிராமத்தின் பின்புறம் மூன்று கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு மலைகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களாக தயாரிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் கனரக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், கல்குவாரிகளில் தினமும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வெடி வைக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் நில அதிர்வு ஏற்படுவதுடன், வெடிப்பின் போது உருவாகும் கடும் புகை மற்றும் வெடி மருந்து நாற்றம் கிராமம் முழுவதும் பரவி வருகிறது.
இதன் காரணமாக கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், வெடிப்புகளால் வெளியேறும் புகை விவசாய நிலங்களை பாதிப்பதுடன், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் உடல்நலத்தையும் பாதித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
நீர்நிலைகள் மாசடைவதோடு, தினந்தோறும் இயக்கப்படும் கனரக லாரிகளால் சாலைகள் சேதமடைந்து, சாலையில் சிதறும் கற்களால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.
எனவே, கல்குவாரிகளின் செயல்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரிய சப்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam