சோலார் பேனல் அனுமதிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி – லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது!
கோவை , 20 ஜூன் (ஹி.ச.) கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் தீபன் (வயது 40). இவர் சோலார் பேனல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 60 கிலோவாட் சோலார் பேனல் அமைக்க வேண்டும் என்று ஒருவர் கூறினார்.
A


கோவை , 20 ஜூன் (ஹி.ச.)

கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் தீபன் (வயது 40). இவர் சோலார் பேனல் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரிடம் சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 60 கிலோவாட் சோலார் பேனல் அமைக்க வேண்டும் என்று ஒருவர் கூறினார்.

இதையடுத்து தீபன், அந்த தனியார் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டு, அங்கு சோலார் பேனல் அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

அத்துடன் அங்கு சோலார் பேனல் அமைக்க சின்னவேடம்பட்டி கவுமார மடாலய வளாகத்தில் செயல்பட்டு வரும் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்.

இதையடுத்து அவர் அங்கு பணியாற்றி வரும் உதவி செயற்பொறியாளர் கதிர்வேல் (52) என்பவரை சந்தித்தார். அதற்கு அவர் தீபனிடம் சோலார் பேனல் அமைக்க ரூ.2 லட்சம் லஞ்சமாக கேட்டார். அதற்கு அவர் ரூ.1½ லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டார்.

இருந்த போதிலும் லஞ்சம் கொடுக்க மனமில்லாத தீபன், இது குறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையிலான போலீசார் உதவி செயற்பொறியாளரை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.90 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீபனிடம் கொடுத்து அதை உதவி செயற்பொறியாளர் கதிர்வேலிடம் கொடுக்கும்படி கூறினர்.

இதனால் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு தீபன், உதவி செயற்பொறியாளர் கதிர்வேலை சந்தித்து, தற்போது தன்னிடம் ரூ.90 ஆயிரம் மட்டுமே இருப்பதாக கூறி அந்த பணத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கதிர்வேலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைதான கதிர்வேல் சரவணம்பட்டி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் 2 முறை லஞ்சம் பெற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA