Enter your Email Address to subscribe to our newsletters

செகந்திராபாத் , 20 ஜூன் (ஹி.ச.)
சர்வதேச யோகா தினத்தையொட்டி தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரம்மாண்ட யோகா விழா நடைபெற்றது.
இதில் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு யோகாவின் சிறப்புகள் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
உலகிற்கு இந்தியா வழங்கிய மிகப் பெரிய கொடை யோகா என்றும், அது எந்த ஒரு மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ சொந்தமானது அல்ல என்றும் தெரிவித்தார்.
யோகாவை மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதும், அதற்கு மதச் சாயம் பூசுவதும் முற்றிலும் முட்டாள்தனமான செயலாகும் என்றார்.
மேலும், யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல; மனிதனை உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக முழுமைப்படுத்தும் அற்புதமான வாழ்க்கை முறையாகும் என்றும் குறிப்பிட்டார்.
மனஅழுத்தத்தை குறைத்து மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் யோகாவை அனைவரும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசிய தலைவர் டாக்டர் கே.லட்சுமண்,
யோகாவுக்கு உலகளவில் கிடைத்து வரும் அங்கீகாரம் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாக கூறினார்.
தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் ராம்சந்தர் ராவ் பேசுகையில்,
பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் யோகா உலக அரங்கில் தனித்த அடையாளம் பெற்றுள்ளதாகவும், மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு யோகா சிறந்த தீர்வாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA