Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 ஜூன் (ஹி.ச.)
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இதுவரை தொடங்கப்படாத ரூ.245.85 கோடி மதிப்பிலான திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுமானத் திட்டங்களுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.115.77 கோடி மதிப்பீட்டிலான 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிகளும், ரூ.130.08 கோடி மதிப்பீட்டிலான 17 வணிக வளாகங்கள் கட்டும் பணிகளும் என மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், கோயில்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டை மையமாகக் கொண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam