Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 20 ஜூன் (ஹி.ச.)
சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள வேங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தாமோதரன் (42) என்பவரின் காலை உடைக்க கலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தச் செய்ததாக அவரது மனைவி வசந்தா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் விசாரணையில், தாமோதரனும் வசந்தாவும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 11 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா, ஆட்டோ ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டு கணவர் மற்றும் குழந்தையை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் குழந்தையை தன்னிடம் அனுப்புமாறு வசந்தா கேட்டபோது தாமோதரன் மறுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, பார்சல் கொண்டு வந்ததாக கூறி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் தாமோதரனை வீட்டின் முன்பு அழைத்து, இரும்பு பேஸ்பால் மட்டையால் அவரது வலது காலை சரமாரியாக தாக்கினர்.
இதில் தாமோதரனின் கால் முறிந்ததுடன் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தாக்குதலை தடுக்க முயன்ற அவரது தாயையும் தள்ளிவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
புகாரின் பேரில் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், பரத் (19) மற்றும் அகஸ்டின் (19) ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பொன்மணி (32) என்ற ரவுடி மூலம் ரூ.1.20 லட்சம் பெற்றுக்கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து பொன்மணியை கைது செய்து விசாரித்ததில்,
தாமோதரனின் மனைவி வசந்தா, உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காலை மட்டும் உடைக்க ரூ.4 லட்சம் பேசிச் ரூ.3.5 லட்சம் முன்பணமாக வழங்கியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து வசந்தா மற்றும் பொன்மணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அகஸ்டின், சம்பவத்திற்குப் பிறகு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து அவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர்மீது சட்டப்பிரிவு 41-ன் கீழ் நடவடிக்கை எடுத்து, சிகிச்சைக்காக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குணமடைந்த பிறகு அவரை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கணவரின் காலை உடைக்க கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தச் செய்ததாக மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெருங்களத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam