Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நேரலை செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
சட்டப்பேரவை நேரலை மீண்டும் தொடங்கப்பட்டதாக அரசு அறிவித்த நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கியதும் நேரலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி மேகதாது அணை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தீர்மானம் குறித்த விவாதங்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், அதன்பிறகு அவை நடவடிக்கைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியினரின் உரைகள் முழுமையாக மறைக்கப்பட்டு, ஆளுங்கட்சியினரின் பேச்சுகள் மட்டும் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் செயலாகவும், சட்டமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அரசு வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அவை விவாதங்களை மக்களிடம் கொண்டு செல்லாமல் இருப்பது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளும் செயலாகும் என்றும், ஊடகங்களுக்கு முழுமையான தகவல்களை வழங்க மறுப்பதும் பாசிசப் போக்காகும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறவுள்ள அவை அமர்வில் தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்ற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், பேரவைத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பேரவை நடவடிக்கைகளை உடனடியாக முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில், சட்டமன்றம் கூடுவதற்கான நோக்கமே கேள்விக்குறியாகி, மக்களின் வாக்குக்கும் மரியாதை இல்லாத நிலை உருவாகும் எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P