நீட் மறு தேர்வு அச்சம் - மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 20 ஜூன் (ஹி.ச.) வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் (NEET) தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்வு குறித்த அச்சம் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய
டிடிவி


தமிழ்நாடு, 20 ஜூன் (ஹி.ச.)

வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் (NEET) தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்வு குறித்த அச்சம் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின் நீண்ட நாள் கனவை நீட் தேர்வு பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், தேர்வு நடைமுறைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் குழப்பங்கள் மறுபுறமும் மாணவர்களின் மனநிலையை கடுமையாக பாதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீட் என்பது தகுதித் தேர்வே தவிர ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல என்றும், எந்தவொரு தேர்வின் முடிவும் ஒருவரின் எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் முடிவுக்கு கொண்டுவராது என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை அச்சத்துடனோ பதற்றத்துடனோ அணுகாமல், தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என மாணவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு நீட் தேர்வு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியது என்றும், நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வெளிப்படையான மற்றும் நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P