Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்து வரும் நிலையில், மொத்த இடங்களில் 55 சதவீதம் நிரம்பியுள்ளதாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1.26 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் இதுவரை 69,877 இடங்கள் நிரம்பியுள்ளன.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் மாணவிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதுவரை 43,166 மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை 26,693 ஆக உள்ளது.
மேலும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 18 பேரும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் சிறப்பு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கணினி அறிவியல், வணிகவியல், ஆங்கில இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கை வரும் வாரங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b