Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்து தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட துயரமான அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதும், பல தொழிலாளர்கள் காயமடைந்ததும் மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ள அவர், இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனவலிமையும் துணிவும் கிடைக்க பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் அனைத்து தொழிலாளர்களும் விரைவில் முழு நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்றும், அவர்களின் விரைவான குணமடைவுக்காக பிரார்த்திப்பதாகவும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam